மனித வாழ்வில் முக்கிய ஆதாரம் பணம்! பணம் இருந்தால் பிணமும் வாய் திறக்கும், பணம் பாதாளம் வரை பாயும் என்பது எல்லாம் பணத்தின் தன்மையை வெளிப்படுத்தும் பழமொழிகள். அந்தப் பணத்தினை சம்பாதிக்க மதத்தினைப் பயன்படுத்தி மூடநம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் இன்றளவும் எத்தனையோ கோவில்கள் கொள்ளைக்கூடாரங்களாக மாறி வருவது அனைவரும் அறிந்ததே! அந்த வரிசையில்….
வாடிப்பட்டியில்….
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்ற பெயரில் ஆழ்துளை கிணறு மூலம் எடுக்கப்படும் தண்ணீரை ஏசுவின் அரு மருந்து என்று காசுக்கு விற்று கூட்டத்தை கூட்டி வருமானத்தால் வளங்கொழித்து வரும் திருத்தலத்தின் முந்தைய நிலையைப்பற்றி பூர்வீகமாக வாழ்ந்து வருபவர்களை கேட்டால் வேடிக்கை-யாகச் சொல்வார்கள் இந்த இடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாடிப்பட்டியில் மேற்கு பகுதியில் பொன்பெருமாள் கரடு என்றழைக்கப்படும் மலையின் அடிவாரத்தில் அருள்மிகு வல்லபகணபதி நகரில் கிணற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் நிலமாக இருந்து வந்தது.
மலையின் கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளில் வயல் காடுகளாகவும், வடக்கு பக்கம் கண்மாயாகவும் இருந்து வந்தன. காலப்போக்கில் கிழக்குப் பகுதியில் குடியிருப்புகளும் மேற்குப் பகுதியில் தனியார் தோட்டக்-கலை பண்ணைகளும் வந்தன. இதில் வடக்குப் பகுதியில் கண்மாய் அப்படியே இருந்து வருகிறது. ஆனால் தெற்குப் பகுதியில் 6 ஏக்கர் நிலத்தில் 6.6.1999-_ஆ-ம் ஆண்டு 1 ஏக்கர் அளவில் கட்டப்பட்டது. அன்னைஅவணி ஆலயம் இதை அப்போது பங்குத் தந்தையாக இருந்துவந்த விஜய் அமல்ராஜ் என்பவர் நன்கொடை வசூல் செய்து அனைத்து ஜாதி, மத இளைஞர்களை ஒன்று சேர்த்து கலைக்குழு அமைத்து மத வளர்ச்சிக்காக வேலைகள் செய்தார். அப்போது அவர்மீது பாலியல் சர்ச்சை எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாராலும் மறக்க முடியாது.
இந்த ஆலயம் அதன்பின் சிறிது சிறிதாக வளர்ந்து வந்தது. இதன் உள்ளே நடுப் பகுதியில் ஏசுநாதர் சிலையும் அதன் வலதுபுறத்தில் ஜன்னலுக்கு அருகே மாதா சிலையும் வைக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் 2001 செப்டம்பர் மாதம் 8-_ஆம் தேதி மாதா சிலையின் பாதத்திலிருந்து தண்ணீர் சிறிது சிறிதாக கசியத் தொடங்கியதாகவும் அது ஏசுவின் அருமருந்து என்றும் கூறினர். மறுநாளே இரவோடு இரவாக அந்த பகுதியை தோண்டி ஆழ்துளை அமைத்து அந்த தண்ணீரை மோட்டார் பம்பு செட் மூலமாக எடுத்து தொட்டி ஒன்றை வைத்து வருவோர் போவோருக்கு முதலில் இலவசமாக மாமருந்தாக கொடுத்து வந்தனர்.
அதில் வாடிப்பட்டியை சேர்ந்த ஜான் மில்லர் என்பவரின் தோல் நோய் குணமானதாகவும், மதுரை பீட்டர் என்பவரின் நெஞ்சு, முதுகிலிருந்த கட்டிகள் நீங்கியதாகவும், டென்சி அமலியின் காது கேட்கத் தொடங்கியதாகவும், வத்தலக்குண்டு வேதராணிக்கு கால்வலி, எரிச்சல் நீங்கியதாகவும் கூறி இது போன்ற புதுமைகள் நடந்து வருவதாக எழுதி வாங்கி சாட்சி-களாக ஆள்களை சேர்க்க தொடங்கினர்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்குமாம்!
அதன்பின் குழந்தைப் பாக்கியம், வேலை வாய்ப்பு, கடன் தொல்லை, நோய் நீங்குதல் போன்ற அதிசயங்கள் நாள்தோறும் நடப்பதாக திருச்சி, சென்னை, பாளை திருநெல்வேலி, நாகர்கோவில், இடுக்கி, மூணாறு, கோவை, கேரளா போன்ற இடங்களில் சர்ச் இருக்கும் இடங்களில் எல்லாம் பரப்பிடவே, அந்த பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். உடனே அன்னை அவணி ஆலயம் என்பதை ஆரோக்கிய அன்னை திருத்தலமாக பெயர் மாற்றம் செய்து இலவச-மாக வழங்கி வந்த ஏசுவின் அருமருந்தை சிறிய சிறிய பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து காசுக்காக விற்கத் துவங்கினர். அதோடு மட்டுமல்லாது இது சம்மந்-தமான உபபொருள்கள் படம், ஒலிநாடா என்று வரு-மானத்திற்கு வழி வகுக்கும் செயல்களில் தீவிரம் காட்டத் தொடங்கினர். இதனால் தற்போது வருமானத்தில் வாடிப்பட்டி திருத்தலம் வளங்கொழித்து வருகிறது.
இந்தியாவில் எத்தனையோ எண்ணில் அடங்காத கிராமக் கோவில்கள் முதல் பெரிய பெரிய ஆலயங்கள் வரை கட்டப்பட்டு வரலாற்றில் மக்கள் முதல் மன்னர்கள் வரை பெயர் சொல்லும் அளவில் இருந்து வருகின்றன. ஆனால் இவைகளில் எல்லாம் வேறுபடும் விதமாக குறுகிய காலத்தில் 10 ஆண்டுகள்கூட ஆகாத நிலையில் திடீர் என்று ஒரு திருத்தலம் வளர்ந்ததன் காரணம் என்ன? நவநாகரிகம் வளர்ந்து, அணுவைத் துளைத்து ஆராய்ச்சி செய்து, கணிப்பொறியை கண்டுபிடித்து சாதனைகள் செய்து, சந்திரனில் சென்று கால்பதித்து எண்ணில் அடங்காத அறிவியல் சாதனைகளை செய்து வரும் இந்த காலத்தில் இப்படியும் சில இடங்களில் தன் சுய லாப வருமானத்திற்காக மத வேத போதனைகள் மூலம் மக்களை ஏமாற்றி வருவது வேதனைக்குரிய-தாகும்.
ஏமாறுபவன் இருக்கும் வரை
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கத்தான் செய்வான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. இறப்பது என்பதும் பிறப்பது என்-பதும் யாருடைய கையிலும் இல்லை. இயற்கையாக தோன்றிய ஒவ்வொரு உயிரும் என்றாவது ஒருநாள் மறையும், அழியும் என்பது மறுக்க முடியாது. ஆனால் இயற்கை மட்டும் என்றும் அழிவது இல்லை. இதில் மனிதப் பிறப்பு என்பது தன் ஆறாவது அறிவு பகுத்-தாராயும் அறிவு பகுத்தறிவு மூலம் சிந்தனை செய்து ஏன்? எதற்கு? எப்படி? என்று வினாக்கள் தொடுத்து, அதற்கு விடைகள் கண்டு சாதனைகளை செய்து வருவ-தற்-காகத்தான் என்பதை அனைவரும் அறிய வேண்-டும். ஆலயத்தின் பெயரோ அன்னை அவணி ஆலயம் ஆரோக்கிய அன்னை திருத்தலம் என்று பெயரை வைத்துக் கொண்டு மத்தியில் உள்ள பீடத்தில் மட்டும் ஏன்? ஏசு சிலை அமைக்க வேண்டும். ஏசு-வின் அருமருந்து ஜீவநீருற்று ஏசு சிலையின் காலடி-யில் இருந்து வராமல் மாதா சிலையின் காலடியிலிருந்து வந்ததன் காரணம் என்ன? ஜீவ நீருற்று என்றால் 24 மணி நேரமும் வந்தபடி இருக்க வேண்டும். ஆனால் அதில் ஆழ்துளை கிணறு அமைத்து அதை தேவைக்கு ஏற்றாற் போல தேக்கி வைத்து பயன்படுத்துவதன் காரணம் என்ன? இந்த அருமருந்தை பயன்படுத்தியவர்கள் இன்று வரை எந்த மருத்துவரையும் போய் பார்க்கவில்லையா? வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் தான் இதற்கு சக்தி உண்டா? மற்ற நாள்களில் ஈ, காக்கா, எறும்புகூட இந்த ஆலயத்-திற்கு வருவதில்லை. அதன் காரணம் என்ன? இந்த அருமருந்து மூலம் உடலில் பூசினால், குடித்தால் நோய் குணமாகும் என்பதோடு குழந்தை பாக்கியம் உண்-டாகும், வேலை வாய்ப்பு, கடன் தொல்லை நீங்கும் என்-பது எல்லாம் எப்படி சாத்தியமாகும்?
மதம் ஒரு அபின் என்று சொன்னது இதனால்-தானோ!
மா. பவுன்ராசா
செய்தியாளர், மதுரை
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது மாதா பாதத்திலிருந்து தண்ணீர் வருகிறது என்ற புரட்டு! பக்தி வியாபாரம் வெகு | குறிச்சொற்கள்: பெரியார்
