சங்கே முழங்கு!
நாலாம் சாதிக்காரனின் நாக்கை இழுத்துவைத்து அழுத்தமாய் சொரனை எழுதிய ஈரோட்டுக் கிழவனுக்கு எம்மினத் தலைவனுக்கு நன்றியுடன் …..

நான்கு இடங்களுக்காக இப்படியா?

இந்தியத் துணைக் கண்டத்துக்கு பிரதமர்களுக்குப் பஞ்சம் போலும்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் இந்தியாவுக்குப் பிரதமராக ஜெயலலிதாவுக்கு முழுத் தகுதியும் உண்டு; பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்று முகமன் கூறும் அளவுக்குத் தங்களைத் தாழ்த்திக் கொண்டு விட்டார்களே.
திராவிடப் பாரம்பரியம் பேசுபவர் – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ; பெரியார் கொள்கை பேசுபவர் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு-
எந்த வகையில் ஜெயலலிதா பொருத்தமானவர் என்று விளக்கியிருக்கலாம்.
தமிழ்நாட்டின் அதிகாரப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் (அமைச்சருக்குரிய தகுதி உண்டு) நாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் வெடித்துக் கிளம்பினாலும், மக்கள் அவதிப்பட்டாலும் அவற்றைப்பற்றி யெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் அக்கறை காட் டாமல் மலைவாசத்தலத்தில் (கொடைநாடு) பங்களாவில் மூன்று மாதம் ஓய்வு எடுத்துக்கொள்கிறார் என்றால், அதைப்பற்றி என்ன நினைப்பது? மந்திரி மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்கும் பழைய காலத்துப் பாணியா? அத்தகைய ஒருவர்தான் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என்று சொல்கிறவர்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றனரே என்று நினைக்கும்பொழுது, அவர் களைப்பற்றிதான் என்ன நினைப்பது?
மக்களைச் சந்திப்பதே தன் தகுதிக்குக் குறைவு என்கிற பழைய காலத்து மகாராணி மனோபாவத்தில் உள்ளவர், 110 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டுக்கான பிரதமர் என்று எப்படித்தான் நினைக்கவும் முடிகிறது?
அண்ணா பெயரில் கட்சி, பெரியார் பெயரை முத்திரை யாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையிருந்தாலும் அந்தத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில்கூட பங்களாவை விட்டு வெளியில் வந்து அத்தலைவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டும் என்கிற அடிப்படை உணர்வும், இங்கிதமும், மரியாதையும் கூடத் தெரியாத ஒருவரை பிரதமருக்கான பதவிக்குச் சிபாரிசு செய்வது எவ்வளவு பொறுப்பற்ற தன்மையாகும்!
தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களைச் சந்திக்கக் கூடியவர் – அதுவும் ஹெலிகாப்டரில் பறந்து செல்லக் கூடியவராக உள்ள ஒருவர் ஜனநாயகம் என்ற சொல்லைக் கூட உச்சரிக்கத் தகுதியற்றவர்.
சாதாரண மக்களை விட்டுத் தள்ளுங்கள்; கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்பதற்கே எவ்வளவு அலைக் கழிப்பு! இன்றைக்குக்கூட்டு சேர்ந்துள்ள தலைவர்களும் (இப்பொழுது வேண்டுமானால் வெளிப்படையாகச் சொல்லக்கூடிய நிலையில் இல்லாமல் இருக்கலாம்) பல நேரங்களில் இந்த அவமானத்தைச் சுமந்தவர்கள் ஆயிற்றே!
ஜெயலலிதாவை பிரதமருக்குப் பொருத்தமானவர் என்று கூறும் வைகோ அவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த் தையில் பட்ட அவமானம் கொஞ்சநஞ்சமா? எதையும் சொல்லும் மன நிலையில் நான் இல்லை என்று புலம்பும் நிலைக்கு அவர் ஆளாகவில்லையா? அப்படி ஆளாகும் நிலைக்கு ஆட்படுத்தியவர்தானே ஜெயலலிதா!
அவர் அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்; ஒரு பொதுச்செயலாளர் அவரின் கட்சி அலுவலகத்துக்குச் செல்வது என்பது அடிப்படைக் கடமை.
ஆனால், இங்கு என்ன நடக்கிறது? பொதுச்செயலாளர் ஜெயலலிதா கட்சி அலுவலகத்துக்கு வருகிறார்! வருகிறார்!! பராக்! பராக்!! என்று வேட்டு சத்தத்துடன், மேளதாளத் துடன் வாழை மரம் – மாவிலை தோரணங்களுடன் வரவேற்புச் சுவரொட்டிகள் சகிதமாக நடக்கிறது என்றால் இதைவிட பூர்ஷ்வாதனமும், அகங்காரமும் வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?
பதவியில் இல்லாத காலத்திலேயே – இவ்வளவு படாடோபமும், பராக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
சர்வாதிகார மனப்பான்மை கொண்ட, மக்கள் நலனில் அக்கறையில்லாத, எதிர்க்கட்சிகளை மதிக்காத, பத்திரிகைக்காரர்களை மதிக்காத முதல்வரை (ஜெயல லிதாவை) ஆட்சியில் நீடிக்கவிட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சியே முடமாகிப் போய்விடும். (குமுதம் ரிப்போர்ட்டர், 10.2.2005) என்று பேட்டி கொடுத்தவர் யார் தெரியுமா?
ஜெயலலிதாவைப் பிரதமராகப் பார்க்க ஆசைப்படும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசுதான்.
சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரி என்று ஜெயல லிதாவை படம் பிடித்த வைகோதான், பிரதமராவதற்கான தகுதி உடையவர் என்று கூறுகிறார்.
இந்தியாவின் பிரமதராகும் தகுதி சம்பல் பள்ளத்தாக்குக் கொலைகாரராகத்தான் இருக்கவேண்டும் போலும்! ஒரு மாநிலத்தின் வளர்ச்சியையே முடக்குபவர்தான் இந்தியா வின் பிரதமராகவேண்டும் போலும்! நான்கு இடங்களுக் காக மனிதர்கள் இப்படி தறிகெட்டுப் போகவேண்டுமா?

No Responses Yet to “நான்கு இடங்களுக்காக இப்படியா?”

Leave a Reply